வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் கூறியுள்ளார்.

Update: 2019-07-17 22:45 GMT
விருதுநகர்,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையினை தமிழக அரசு தற்பொழுது இரு மடங்காக உயர்த்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவும் இருத்தல் கூடாது. தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை தொடங்கியிருத்தல் வேண்டும்.

பொது பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகையாக 10-ம் வகுப்பு தோல்வியுற்றோருக்கு ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மாதந்தோறும் வழங்கப்படும். பிளஸ்-2 மற்றும் பட்டயப்படிப்பு படித்தோருக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு முடித்தோருக்கு ரூ.600-ம் வழங்கப்படும்.

அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் எனில் கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். வருமான உச்ச வரம்பு கிடையாது. 57 வயது அல்லது 10 ஆண்டுகள் வரை எது முந்தையதோ அது வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம். விருதுநகரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் அணுகி வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். உதவித்தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஏற்கனவே இந்த அலுவலகத்தில் உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித்தொகை பெற்றுள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

தற்பொழுது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் உதவித்தொகை பெற்று வரும் அனைவருக்கும் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்