குலசேகரம் காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

குலசேகரம் காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்றினர்.;

Update: 2019-07-17 23:00 GMT
குலசேகரம்,

குலசேகரம் பேரூராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை அந்த பகுதியில் உள்ளது. இங்கு காய்கறி, மீன் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்த கடைகள் பேரூராட்சி அனுமதி பெற்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சந்தையில் சிலர் பேரூராட்சி அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து கடைகளை அமைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அதைதொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறிந்து அவற்றை உடனே அகற்றும்படி நோட்டீசு கொடுத்தனர். இதேபோல், பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆனால், அதிகாரிகள் வழங்கிய காலக்கெடு முடிவடைந்த பிறகும் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் கட்டமாக குலசேகரம் காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் ரெமாதேவி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளின் வெளியே உள்ள இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கூரைகள் ஆகியவையும் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக குலசேகரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குலசேகரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக அனைவருக்கும் நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை போல் மற்ற பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்