கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர். சம்பளம் காலதாமதமாக வழங்குவதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2019-07-17 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் எலக்ட்ரிக் ஊழியர், குடிநீர் பணியாளர் என 60-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தினசரி 400 ரூபாய் வீதம் மாதம் தோறும் 5-ந் தேதி 12 ஆயிரத்து 400 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக 5-ந் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம் 15-ந் தேதிக்கு மேல் காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஒருசில பணியாளர்களுக்கு 800 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது என்றும் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடனே அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். உடனே ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்