திண்டிவனம் ராஜாங்குளம் தூர்வாரும் பணி - அதிகாரிகள் ஆய்வு
திண்டிவனம் ராஜாங்குளத்தில் நடக்கும் தூர்வாரும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;
திண்டிவனம்,
திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் திண்டிவனம் நகரின் மைய பகுதியில் மாசடைந்து காணப்பட்ட ராஜாங்குளம் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பணியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் குளத்தை தூர்வாரி வருகிறார்கள்.
நேற்று காலை நடந்த தூர்வாரும் பணியை மத்திய அரசின் நீர்வள மேலாண்மை சிறப்பு அலுவலர் அரவிந்த் சரண், திண்டிவனம் சப்-கலெக்டர் மெர்சிரம்யா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், குளத்தை தூர்வாரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுப்பதோடு, குளத்தை அழகு படுத்தவேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினர். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.