தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சத்தில் தானியங்கி ரத்தபரிசோதனை கருவி

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சத்தில் தானியங்கி ரத்தபரிசோதனை கருவியை முதல்வர் குமுதாலிங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-17 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, கண் பரிசோதனை பிரிவு செயல்பட்டு வருகிறது. பிரசவத்திற்காக தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் வருகின்றனர். மேலும் கர்ப்பமான பெண்களும் பரிசோதனைகளுக்காக வந்து செல்கின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு ரத்தபரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகளை துரிதமாகவும், துல்லியமாகவும் பெறுவதற்கு வசதியாக தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஆய்வகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் தானியங்கி ரத்தபரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது.

இந்த கருவியின் செயல்பாட்டை நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் தானியங்கி ரத்தபரிசோதனை கருவி புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரத்தம் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்படும். நோயாளிகளுக்கு அலைச்சலும் ஏற்பட்டு வந்தது. ஆனால் புதிய கருவியின் மூலம் ஒரே நேரத்தில் 150 பேருக்கு ரத்தபரிசோதனை மேற்கொள்ள முடியும்.

10 நிமிடத்தில் 30 வகையான பரிசோதனைகளை செய்யலாம். 24 மணிநேரமும் ஆய்வகம் செயல்படும். ரத்தபரிசோதனை மேற்கொள்ள கட்டணம் கிடையாது. இது முற்றிலும் இலவசமாகும். எல்லா துறைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் தொடர்ந்து 8-வது ஆண்டாக ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை முதலிடம் வகித்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை இன்றி தான் சுகபிரசவம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர்கள் பாரதி, ஞானசெல்வன், நிலைய மருத்துவ அலுவலர் உஷாரவி, உயிர் வேதியியல்துறை தலைவர் சசிவதனம் மற்றும் இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்