வணிக நிறுவனங்கள் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்தால் நகராட்சி எடுத்துச்செல்லாது அதிகாரிகள் தகவல்
வணிக நிறுவனங்கள் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்தால் நகராட்சி எடுத்துச்செல்லாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி மற்றும் திருவத்திபுரம் ஆகிய நகராட்சிகளில் உள்ள கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை சேர்ந்த உரிமையாளர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி மண்டல இயக்குனர் செ.விஜயகுமார் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் வரவேற்றார். திருவத்திபுரம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திடக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வணிக நிறுவன உரிமையாளர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஒரு வணிக நிறுவனம் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்தால் அதை நகராட்சி எடுத்துச்செல்லாது. அந்த கழிவுகளை அந்த நிறுவனத்தினரே மேலாண்மை செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 100 கிலோவுக்கு மேல் கழிவுகளை உற்பத்தி செய்யும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டப உரிமையாளர்களுக்கு அந்த கழிவுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அவர்களிடம், தங்கள் நிறுவனங்களில் சேரும் கழிவுகளை அவர்களே அதை உரமாக்கிக்கொள்ள என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட உரிமையாளர்கள் கழிவுகளை உரமாக்க இடவசதி இல்லை, பணியாட்கள் இல்லை என தங்களது குறைகளை எடுத்துக் கூறினர். அவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனங்கள் குறித்து எடுத்துக் கூறினோம். உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை மேற்கொள்ளலாம் என ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளர்கள் வினோத்கண்ணா, கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். துப்புரவு ஆய்வாளர் ஆல்பர்ட் தொகுத்து வழங்கினார்.