மகள் திருமண ஏற்பாட்டிற்காக பரோலில் வரும் நளினி வேலூரில் தங்குகிறார்

மகள் திருமண ஏற்பாட்டிற்காக ஒரு மாதம் பரோலில் வரும் நளினி வேலூர் சத்துவாச்சாரியில் தங்குகிறார். இதனால் அவருடைய மகள் திருமணமும் வேலூரிலேயே நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2019-07-17 23:00 GMT

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்களுடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதம் பரோல் கேட்டு நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் நளினி கடந்த 5–ந் தேதி நேரில் ஆஜராகினார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது. நளினி பரோலில் செல்லும் போது அவர் தங்க இருக்கும் இடத்தை சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி நளினி பரோலில் செல்லும் போது சென்னையில் உள்ள அவருடைய சகோதரர் வீடு அல்லது காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் தங்குவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நளினி பரோலில் செல்லும்போது தங்குவதற்கு வேலூர் சத்துவாச்சாரியில் வாடகைக்கு வீடு பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பரோலில் வெளியே வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

நளினி– முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை வேலூர் பெண்கள் சிறையில் சந்தித்து பேசிவருகிறார்கள். அதன்படி நாளை மறுநாள் (20–ந்தேதி) அவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது மகள் திருமணம் குறித்து அவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்றும், அதைத்தொடர்ந்து அன்றே நளினி பரோலில் வரலாம் அல்லது அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) வரலாம் என்று கூறப்படுகிறது.

பரோலில் வந்ததும் வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க பேரவை நிர்வாகி வீட்டில் தங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த வீடு பாதுகாப்பானதுதானா என்பது குறித்து சிறை நன்னடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் அறிக்கை கொடுத்துள்ளனர்.

நளினி வேலூரில் தங்க முடிவு செய்துள்ளதால் அவருடைய மகள் திருமணமும் இங்கேயே போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நளினி பரோலில் வந்தபிறகே அது உறுதி செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்