வானவில் : கியா மோட்டார்சின் அடுத்த வரவு ‘கார்னிவல்’
பொதுவாக ‘கார்னிவல்’ என்றாலே ஆங்கிலத்தில் கொண்டாட்டம், திருவிழா என்று அர்த்தம். அதையே தனது அடுத்த தயாரிப்புக்கு பெயராக சூட்டியுள்ளது கியா மோட்டார்ஸ்.
கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் ஆந்திர மாநிலத்தில் ஆலை அமைத்து உற்பத்தியை தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் முதல் தயாரிப்பாக செல்டோஸ் என்ற பெயரிலான காரை அறிமுகப்படுத்தியது. அதற்கான முன்பதிவுகள் இப்போது ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் தனது அடுத்த தயாரிப்பு பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது கியா மோட்டார்ஸ். உற்பத்தி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் 5 தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது கியா மோட்டார்ஸ். இந்த மாடல் கார் சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும். 2018-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிற்கு என இந்த மாடலில் சில மாற்றங்களைச் செய்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது கியா மோட்டார்ஸ். இந்த காரில் 7 பேர் பயணிப்பது மற்றும் 11 பேர் பயணிக்கும் வகையில் சீட் அமைப்பு உள்ளது. இந்தக் காரின் கடைசி வரிசை, அதாவது 9, 10 மற்றும் 11-வது பயணிக்குக் கூட போதிய அளவு கால்நீட்டும் வசதி, தலை இடிக்காத தன்மையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 பேர் பயணிக்கும் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. அதிலும் மூன்றாவது இருக்கையில் பயணிப்பவர்கள் உள்ளே செல்வதற்கு வசதியாக இரண்டாவது வரிசை சீட்கள் எளிதாக மடக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக அளவில் அதாவது 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் இடவசதி டிக்கி பகுதியில் இருப்பது இதன் சிறப்பாகும்.
இதன் உள்பகுதியில் 10.1 அங்குல தொடு திரை உள்ளது. இதுவும் இன்டர்நெட் இணைப்பு கொண்ட காராகும். இதில் யு.வி.ஓ. கனெக்ட் எனும் இணைப்பு வசதியை கியா மோட்டார்ஸ் அளிக்கிறது. இரண்டு சன்ரூப் மேற்கூரை திறந்து மூடும் வசதி கொண்டது. டிரைவர் இருக்கை பவர் அட்ஜெஸ்டபிள் இயக்கும் வசதி கொண்டது. கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 4 ஏர் பேக் கொண்டது. இது தவிர ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், இ.எஸ்.சி., டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் கொண்டது.
2.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது கியா மோட்டார்ஸ் இது முழுக்க முழுக்க பி.எஸ்6. புகை சான்று விதிகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்த என்ஜின் 202 ஹெச்.பி. திறனை 3,800 ஆர்.பி.எம். வேகத்திலும், 441 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 2,750 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 6 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இதில் உள்ளது. இது தவிர 3.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலும் அறிமுகமாகிறது. இது 270 ஹெச்.பி. திறன் மற்றும் 318 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கும். இது 5,115 மி.மீ. நீளமும், 1,985 மி.மீ. அகலமும், 1,740 மி.மீ. உயரமும், 3,060 மி.மீ. விட்டமுள்ள சக்கரங்களையும் கொண்டது.
இந்த மாடல் என்ஜின் முழுமையாக கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்படும் என தெரிகிறது. எம்.பி.வி. மாடல்களைப் பொருத்த மட்டில் டொயோடா இனோவா கிரைஸ்டா மாடல் மட்டுமே உள்ளது. இதற்கு அடுத்து சொகுசு பிரிவில் மெர்சிடஸ் பென்ஸ் வி-கிளாஸ் உள்ளது. இடைப்பட்ட பிரிவில் எந்த எம்.பி.வி. வாகனமும் இல்லை. இந்த இடத்தை கியா மோட்டார்ஸின் கார்னிவல் நிரப்பும். பயண ஏற்பாட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் இதை வாங்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன.