வானவில் : ஹோண்டா நிறுவனத்தின் புதிய வேரியன்ட்
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹோண்டா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல் டபிள்யூ.ஆர்.வி. மாடலில் புதிய வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.9.95 லட்சமாகும்.
வி கிரேடு மாடல் கார் தற்போது டீசலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் வெளிப்புற வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த முகப்பு விளக்கு எல்.இ.டி. (பகலில் ஒளிரும் டி.ஆர்.டி.) கொண்டதாக வெளி வந்துள்ளது. அத்துடன் பனிக் காலத்தில் துல்லியமாக ஒளி வீசும் பாக் விளக்குகள், கன் மெட்டலால் ஆன அலாய் சக்கரங்கள் என வெளிப்புறத் தோற்றம் கம்பீரமானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் பின்புற பார்க்கிங் சென்சார், முன் இருக்கை பயணிகளின் இருக்கை பெல்ட் அணிவதை உணர்த்துவது, வேகமாக சென்றால் அதை எச்சரிப்பது, வேகமாக செல்லும்போது கார் கதவுகள் தானாக மூடுவது உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் 17.7 அங்குல தொடுதிரை நேவிகேஷன், உயர்த்தப்பட்ட ஸ்டீரிங், ஆன்-ஆப் பட்டன் வசதிகளோடு வந்துள்ளது. எஸ்.யு.வி. பிரிவில் குறைந்த விலையில் வந்துள்ள இந்த டீசல் கார் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று நிறுவனம் நம்புகிறது.