வானவில் : புதிய வண்ணத்தில் கவாஸகி நின்ஜா 1000
பிரீமியம் மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ள கவாஸகி நிறுவனம் சமீபத்தில் நின்ஜா 1000 என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இந்த மோட்டார் சைக்கிள் தற்போது மேட்பியூஷன் சில்வர் என்ற புதிய வண்ணத்தில் கிடைக்கிறது. மொத்தமே 60 மோட்டார் சைக்கிளை இந்த வண்ணத்தில் தயாரித்து விற்க கவாஸகி முடிவு செய்து உள்ளது. நின்ஜா மாடல் மோட்டார் சைக்கிள் ஏற்கனவே கேன்டி லைம் கிரீன் மற்றும் ஸ்பார்க் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்தது.
தற்போது மூன்றாவதாக மிகவும் அரிதான மெட்டாலிக் மேட் பியூஷன் கிரே வண்ணத்தில் வந்துள்ளது. இதன் விலை ரூ.10.29 லட்சமாகும்.
இது 1,043 சி.சி. திறன் கொண்ட நான்கு லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. இது 142 ஹெச்.பி. திறனை 111 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. 6 கியர்களுடன் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வசதியோடு இது வந்துள்ளது. இதில் மூன்று வகையான டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி உள்ளது. அத்துடன் இரண்டு வகையான பவர்மோட் வசதியும் உள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகமான போது இதன் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக தற்போது 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாக நிர்ணயித்துள்ளது. இப்பிரிவில் ஏற்கனவே சந்தையில் உள்ள டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் (விலை ரூ.13 லட்சம்), ஹோண்டா சி.பி.ஆர்650.ஆர் (விலை ரூ.7.70 லட்சம்) ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் இந்த இரண்டு மோட்டார் சைக்கிளைக் காட்டிலும் நின்ஜாவின் திறன் அதிகம் என்ற வகையில் அது இளைஞர்களைப் பெரிதும் கவரும் என்பதில் வியப்பில்லை.