தேர்தல் பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ளாத 1,233 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் - பணியிட மாற்றம் செய்யவும் நடவடிக்கை

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத 1,233 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-07-16 22:00 GMT
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் 7 ஆயிரத்து 557 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ஒரு இடத்தில் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பு குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு அவர்கள் வழங்கியிருந்த செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் 1,233 வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வில்லை. அவர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கத்தக்க காரணம் இல்லாமல் பயிற்சி வகுப்பிற்கு வராதவர்களுக்கு பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக நாளை (வியாழக்கிழமை) சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்திட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சண்முகசுந்தரம் ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான ஆணையும் நேற்று வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு வகுப்பிலும் கலந்துகொள்ளாதவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்