திருக்கோவிலூர் அருகே, மோட்டார் சைக்கிள் மோதி ஆந்திர மாநில பெண் பலி - கணவன் கண் எதிரே பரிதாபம்

திருக்கோவிலூர் அருகே கணவன் கண் எதிரே மோட்டார் சைக்கிள் மோதி ஆந்திர மாநில பெண் பலியானார்.;

Update: 2019-07-16 23:15 GMT
ரி‌ஷிவந்தியம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பாமுராஜி பாபு (வயது 55). இவரது மனைவி பாமுசில்க்கம்மா(50). இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள கோவில்களை தரிசிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காரில் தமிழகத்துக்கு வந்த 2 பேரும் வேலூர், திருவண்ணாமலையில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சடகட்டி முனியப்பன் கோவில் எதிரே வந்த போது பாமுராஜி பாபு காரை சாலையோரமாக நிறுத்தினார்.

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய பாமுசில்க்கம்மா இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது நெடுகம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் தானியேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக பாமுசில்க்கம்மா மீது மோதியது. இந்த விபத்தில் பாமுசில்க்கம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். தன் கண்முன்னே மனைவி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாமுராஜி பாபு, பாமுசில்க்கம்மாவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்த மணலூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து, பலியான பாமுசில்க்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்