காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு - காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.;

Update:2019-07-17 04:30 IST
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே கருணாகரநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இருப்பினும் குடிநீர் வழங்க மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கருணாகரநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலிகுடங்களுடன் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து பெண்கள் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள், புதிய ஆழ்துளை கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்