ராமநத்தத்தில், வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ராமநத்தத்தில் வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,
திட்டக்குடி அருகே ராமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ராமநத்தத்தில் உள்ள இவருடைய வீட்டில் தற்போது யாரும் இல்லை. இந்த வீட்டை பெரியசாமியின் கார் டிரைவரான ஒருவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பெரியசாமியி்ன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரியசாமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள்அவருடைய வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 5 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் டிவி ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, திருட்டு நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.