மதுரையில் அழுகிய முட்டைகளை விற்பனை செய்த நிறுவனத்துக்கு நோட்டீசு

உணவு பகுப்பாய்வு முடிவை தொடர்ந்து, மதுரையில் பேக்கரிகளில் கேக் தயாரிப்பதற்காக அழுகிய முட்டைகளை விற்பனை செய்த நிறுவனத்துக்கு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீசு வழங்கியுள்ளனர்.;

Update: 2019-07-16 22:45 GMT
மதுரை,

மதுரை தத்தனேரி பகுதியில் அழுகிய மற்றும் சேதமடைந்த முட்டைகளை பேக்கரிகளுக்கு விற்பனை செய்து வந்த நிறுவனத்தின் குடோன் கடந்த சிலதினங்களுக்கு முன்பு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. அத்துடன், அங்கிருந்த முட்டைகள் சுகாதார பணியாளர்கள் மூலம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், சில முட்டைகள் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மதுரையில் விற்பனை செய்யப்பட்ட அழுகிய முட்டைகளின் பகுப்பாய்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

இது குறித்து மதுரை மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:-

மதுரை தத்தனேரியில் உள்ள பிரபலமான முட்டை விற்பனை நிலையத்தின் குடோனில் அழுகிய மற்றும் சேதமடைந்த முட்டைகள் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. ஏற்கனவே இந்த நிறுவனம் விற்பனை செய்த அழுகிய முட்டைகள் மூலம் செய்யப்பட்ட 10 டன் கேக்குள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

ஆனால், மீண்டும் அழுகிய முட்டைகளை விற்பனை செய்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் குடோனில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த, அழுகிய முட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சில முட்டைகள் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உணவு பகுப்பாய்வு கூடம் அளித்துள்ள முடிவுகளின் படி, இந்த குடோனில் கைப்பற்றப்பட்ட முட்டைகள் மனிதர்கள் உண்ண தகுதியில்லாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைத்த பின்னர், அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், உணவுப்பாதுகாப்புத்துறை வழங்கிய உரிமமும் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்