அரசு ஆஸ்பத்திரியை சூறையாடியதை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டம்

ஆஸ்பத்திரியை சூறையாடியதை கண்டித்து புதுவை சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-16 22:00 GMT
புதுச்சேரி,

புதுவை திருக்காஞ்சியை சேர்ந்த ஜெயவேல் கடந்த 14-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை சூறையாடினார்கள். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள்.

இந்த செயல் சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து புதுவை மாநில ஒருங்கிணைந்த அனைத்து பணி பிரிவு சுகாதார ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு செயற்குழு கூட்டம் டாக்டர் அன்புசெந்தில் தலைமையில் நடந்தது. அப்போது கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து மருத்துவ நிலையங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும், 24 மணிநேரமும் இயங்கும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் தொடர் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும், மருத்துவமனை சுகாதார ஊழியர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக தலைமை செயலாளர் தலைமையில் சுகாதார செயலாளர், அந்தந்த பிராந்திய கலெக்டர், போலீஸ் டி.ஜி.பி., சுகாதாரத்துறை இயக்குனர் அடங்கிய குழு அமைத்து பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும், கரிக்கலாம்பாக்கத்தில் நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற வழக்கினை பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், சுகாதார உதவியாளர்கள், ஆய்வாளர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளை சார்ந்த ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காலை 7.30 மணிமுதல் 9.30 மணிவரை நடந்தது.

அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லட்சுமணசாமி கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் சங்க கன்வீனர் கலைச்செல்வன், டாக்டர்கள் சங்க தலைவர் ஸ்ரீராம், செவிலியர் சங்க தலைவி ஜானகி, மருந்தாளுனர் சங்க தலைவர் அன்புசெல்வம், துணை சுகாதார செவிலியர் சங்க தலைவி சாயிராபானு, சுகாதார ஊழியர் சங்க தலைவர் ஜம்புகேசவன், சுகாதார ஆய்வாளர் சங்க தலைவர் வெங்கடேசன் மற்றும் பொறுப்பாளர்கள் ராஜ்குமார், வெற்றிவேல், கணபதி, சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனால் சிறிது நேரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் அவசர பணிகளுக்காக ஊழியர்களும் பணியில் இருந்தனர். இதேபோல் மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையங்களிலும் போராட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்