மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Update: 2019-07-16 21:30 GMT
திசையன்விளை,

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் திசையன்விளையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்வி கொள்கை பற்றி அதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி ஒரு மாத காலமாக ஆய்வு செய்துள்ளது. அதுபற்றி முழுவதும் தெரியாமல் நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்த திட்டம் ஏழை மக்களுக்கு பயனுள்ள திட்டமாகும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தங்கள் அணி பலவீனப்படும் என்பதற்காக தான் அவர் அரசியலுக்கு வருவதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்து வருகிறார். அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்து மக்கள் கட்சி ரஜினிகாந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும். அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் கார்த்தீசன், நெல்லை கிழக்கு மாவட்ட செயல் தலைவர் முருகானந்தம், மாவட்ட தலைவர் சண்முகவேல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் திசையன்விளை நேரு திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார்.

மேலும் செய்திகள்