நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு ரெயில்வே மேம்பாலம் எப்போதும் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு வாலிபர் அந்த பாலத்தின் உச்சிப்பகுதிக்கு சென்றார். பின்னர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நின்றார். இதை பார்த்த வாகன ஓட்டிகள், ஏன் பாலத்தின் சுவரில் ஏறி நிற்கிறீர்கள் என்று கேட்டனர்.
அப்போது அவர் பாலத்தில் இருந்து கீழே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், அருகில் சென்று அவரை காப்பாற்ற முயன்றபோது, அருகில் வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதுபற்றி தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அவரது கவனத்தை திசை திருப்பி அதிரடியாக பிடித்து கீழே விழாமல் மீட்டனர்.
பின்னர் அவரை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடியை சேர்ந்த முருகன் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை கூறி குழப்பியதுடன், மருந்து கடை அதிபர் என்றும் தெரிவித்து உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவருடைய உறவினர்களை நெல்லைக்கு வரவழைத்து அவரை எச்சரித்து ஜாமீனில் அவர்களுடன் அனுப்பி வைத்தனர். ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து வாலிபர் குதிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.