கீழடி அகழ்வாராய்ச்சியில், கூடுதலாக குழிகள் தோண்டப்பட்டதில் கிடைத்த மண்பாண்ட ஓடுகள்
கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியின்போது கூடுதலாக குழிகள் தோண்டப்பட்டதில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்தன.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி ஊராட்சிக்குட்பட்ட பல பகுதியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 5-ம் கட்ட ஆராய்ச்சி பணியில் முதலில் 4 குழிகளும், அதன் பின்னர் 3 குழிகள் என மொத்தம் 7குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் 7 குழிகள் தோண்டப்பட்டு மொத்தம் 14 குழிகளில் ஆய்வு நடைபெற்று வந்தது. தற்போது 15-வது குழி தோண்டப்பட்டு அதில் இரட்டை சுவரின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மாரியம்மாள் என்பவரது நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதகுரு என்பவரது நிலத்தில் கூடுதலாக குழிகள் தோண்டப்பட்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த புதிய குழிகளில் மண்பாண்ட ஓடுகள் அதிகஅளவில் கிடைத்துள்ளன. மண்பாண்ட ஓடுகள் குழிகள் தோண்டப்படும் மண்ணை பொறுத்து வித்தியாசமாக இருக்கும் என்றும் மற்றும் சில பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த அகழ்வாராய்ச்சி பணியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.