ராமேசுவரத்தில் ஆடித்திருவிழாவிற்கு முன்னதாக , சாலைகளை சீரமைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி மனு

ராமேசுவரம் ஆடித்திருவிழா தேரோட்டத்திற்கு முன்னதாக பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டபட்ட சாலைகளை சீரமைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2019-07-15 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட இந்துமக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் தேர் வடிவில் செய்து இழுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- உலகப்புகழ்வாய்ந்த அகில இந்திய புண்ணியதலமான ராமேசுவரத்தில் ராமநாதசாமி திருக்கோவில் ஆடித்திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. விழாவின்போது தினந்தோறும் சாமி, அம்பாள் திருவீதி உலா ரதவீதிகளை சுற்றி நடைபெறும். குறிப்பாக ஆடித்தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆடித்திருக்கல்யான விழா வரும் 24-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. ஆனால், கோவிலை சுற்றிலும் ரதவீதிகளில் பலமாதங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் பள்ளங்கள் தோண்டி கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன.

இதனால் இந்த ரதவீதிகளில் தேரோட்டம் உள்ளிட்ட ஆடித்திருவிழா நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதில் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக இந்த பணிகளை விரைவுபடுத்தி கோவில் திருவிழாவிற்கு முன்னர் சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து விழா சிறப்பாக நடைபெற வழிவகை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார். 

மேலும் செய்திகள்