டாஸ்மாக் பாரில் வாலிபர் குத்திக்கொலை - கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூரில் டாஸ்மாக் பாரில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-15 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் ஆண்டிப்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே டாஸ்மாக் பார் உள்ளது. இந்த பாருக்கு நேற்று முன்தினம் மாலை ஆண்டிப்பாளையத்தில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த அருள்குமார்(23) அவருடைய நண்பர்கள் பிரதாப்(29),முருகன்(24), விக்னே‌‌ஷ்(24), பார்த்தீபன்(23), ஏழுமலை(25) ஆகியோர் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ஏற்கனவே மது அருந்திக்கொண்டு இருந்த வடமாநில வாலிபர் ஒருவரை, சிலர் தாக்கியதுடன் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை கவனித்த அருள்குமார், அங்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தியால் அருள்குமாரின் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது.

இதை கவனித்த அருள்குமாரின் நண்பர்கள் அந்த கும்பலிடம் இருந்து அருள்குமாரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் அந்த கும்பல் கத்தி மற்றும் கல், பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஒரு காரில் ஏறி தப்பியது. படுகாயத்துடன் கிடந்த 6 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அருள்குமார் இறந்தார்.

படுகாயமடைந்த பிரதாப், முருகன், விக்னே‌‌ஷ், பார்த்தீபன், ஏழுமலை ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில் பாரில் புகுந்து தாக்குதல் நடத்தியது 7 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. அந்த கும்பல் தப்பிய காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் காரில் வந்தவர்கள் சாமுண்டிபுரம் வலையங்காட்டை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.

திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக அந்த கும்பலை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த சம்பவம் தொடர்பாக வலையங்காட்டை சேர்ந்த ஆகா‌‌ஷ்(19), வருண்குமார்(19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஆகா‌‌ஷ் கோவையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வருண்குமார் டிப்ளமோ மரைன் என்ஜினீயரிங் படித்து கொண்டே வாடகை கார் டிரைவராக உள்ளார்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், வாடகை காரில் தனது நண்பர்களுடன் பாருக்கு சென்றபோது, அங்கிருந்த வடமாநில வாலிபரிடம் பணம் அதிகம் இருந்ததால் அதை பறிக்க முயன்றபோது தகராறு ஏற்பட்டதாகவும், அதை தட்டிக்கேட்க வந்தவர்களை தாக்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்