‘நோ பார்க்கிங்' பகுதியில் வாகனம் நிறுத்தியவர்களிடம் ஒரே வாரத்தில் ரூ.23 லட்சம் அபராதம் வசூல்
‘நோ பார்க்கிங்'கில் வாகனங்களை நிறுத்தியவர்களிடம் இருந்து ஒரே வாரத்தில் ரூ.23 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் வாகன நிறுத்தங்கள் உள்ள இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் ‘நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் அதிரடி நடவடிக்கையை மாநகராட்சி கடந்த 7-ந்தேதி தொடங்கியது.
இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் மாநகராட்சி விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனத்தை நிறுத்தி சென்றவர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9-ந்தேதி மட்டும் 107 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.5¼ லட்சம் அபராதம் வசூலாகி உள்ளது.
மாநகராட்சி விளக்கம்
இந்தநிலையில் வருவாயை நோக்கமாக கொண்டு மக்களிடம் அதிக அபராதம் வசூலிக்கப்படவில்லை என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மக்களிடம் அதிக அபராதம் வசூலிக்கப்படவில்லை. வாகன ஓட்டிகளிடம் ஒழுங்கை ஏற்படுத்தவே அதிகளவு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.