விராரில் சிறுமியை மானபங்கம் செய்த காவலாளிக்கு அடி-உதை நிர்வாணமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
விராரில் சிறுமியை மானபங்கம் செய்த காவலாளியை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரை நிர்வாணமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு உண்டானது.
வசாய்,
பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் சாகேப் சகானி(வயது22). இவர் கடந்த சனிக்கிழமை அன்று டியூசன் வகுப்புக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 6 வயது சிறுமியை, படிக்கட்டில் வைத்து மானபங்கம் செய்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் சம்பவத்தை உறுதிபடுத்தி கொள்வதற்காக கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்வையிட்டனர்.
நிர்வாணமாக...
அப்போது, அதில் சாகேப் சகானி சிறுமியை மானபங்கம் செய்யும் காட்சி பதிவாகியிருந்தது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவலாளி சாகேப் சகானியை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் அவரது ஆடைகளை கிழித்தெறிந்தனர். பின்னர் அவரை அர்னாலா கோஸ்டல் போலீஸ் நிலையத்திற்கு நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்து சென்று ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
போலீசார் அவரை கைது செய்தனர். குடியிருப்புவாசிகள் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து இருந்த அவர் சிகிச்சைக்காக காந்திவிலியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.