ஏ.டி.சி.யில் இருந்து எல்க்ஹில் பகுதிக்கு, குறைந்த கட்டணத்தில் மீண்டும் ஆட்டோக்களை இயக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ஏ.டி.சி.யில் இருந்து எல்க்ஹில் பகுதிக்கு குறைந்த கட்டணத்தில் மீண்டும் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி ஊட்டி எல்க்ஹில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது எல்க்ஹில் பகுதிக்கு ஏ.டி.சி.யில் இருந்து ஆட்டோக்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி எல்க்ஹில், ஆர்.கே.புரம், குமரன் நகர், மகாத்மா காலனி பகுதிகளில் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். ஏ.டி.சி. பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தி குறைந்த கட்டணத்தில் எல்க்ஹில்லுக்கு மக்களை ஏற்றி செல்வோம். ஆட்டோ டிரைவர்கள் 15 பேர் குறைந்த வாடகையில் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று வருகிறோம். கடந்த ஒரு மாதமாக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆட்டோக்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த விடுவது இல்லை.
மேலும் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ இயக்குவது பிரச்சினையாக உள்ளது. பெரும்பாலானோர் அதிக வாடகை கொடுக்க முடியாத நிலைமை இருக்கிறது. எனவே வயதானவர்கள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால், அவர்கள் ஆட்டோவை நம்பி உள்ளனர். மற்ற ஆட்டோ டிரைவர்கள் அப்பகுதிக்கு வருவது இல்லை. எங்களை எல்க்ஹில் பகுதிக்கு ஆட்டோ ஓட்டக்கூடாது என்று சங்கத்தினர் கூறி உள்ளனர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எங்களது வருமானத்தை நம்பியே குடும்பம் உள்ளது. கடந்த ஒரு மாதமாக குழந்தைகளின் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமலும், பெற்றோர்களின் மருத்துவ செலவை கவனிக்க முடியாமலும் வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாடும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள், பள்ளி குழந்தைகள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே உடனடியாக விசாரணை நடத்தி ஏ.டி.சி.யில் இருந்து எல்க்ஹில் பகுதிக்கு நாங்கள் மீண்டும் ஆட்டோவை இயக்க நடவடிக்கை எடுப்பதோடு, வாழ்வாதாரத்தை திரும்ப பெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொம்புகொரை கிராம மக்கள் அளித்த மனுவில், கொம்புகொரை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு இன்று வரை நடைபாதை மட்டும் உள்ளது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் தான் சாந்தூர் பகுதியில் சாலை வரும். கிராமத்தில் இருந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் நடந்து செல்ல மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் நடந்து செல்லும் நிலை நீடிக்கிறது. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஜீப், கார் செல்லும் அளவில் நடைபாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.