வாஷியில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்தவர் கைது கூட்டாளிக்கு வலைவீச்சு

வாஷியில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-07-15 22:06 GMT
மும்பை,

வாஷி ரெயில் நிலையத்தையொட்டி உள்ள வணிகவளாகம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை கோவண்டியை சேர்ந்த விஜய்(வயது30) என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது கையில் இருந்து கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டு இருந்தது. எனவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவத்தன்று 2 பேர் விஜயை பின்தொடர்ந்து செல்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை பின் தொடர்ந்து சென்ற மான்கூர்டை சேர்ந்த ஆசிப் சேக்(22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பணம் பறிக்க முயற்சி

இதில், விஜய் சம்பவத்தன்று நவிமும்பை வாஷி வணிகவளாகம் அருகில் சென்று உள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஆசிப் சேக் (22) மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி விஜயிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்று உள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் விஜயை கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டது போல சித்தரிக்க அவரது கையில் கத்தியை வைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் ஆசிப் சேக்கை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின் றனர்.

மேலும் செய்திகள்