“கருங்குளம் மேலக்கால் பாசன குளங்களை தூர்வார வேண்டும்” கலெக்டரிடம் வலியுறுத்தல்
“கருங்குளம் மேலக்கால் பாசன குளங்களை தூர்வார வேண்டும்“ என்று நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது தூத்துக்குடி வர்த்தகரெட்டிப்பட்டி சார்பில் ஊர் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில், ‘எங்கள் ஊரில் உள்ள உலகம்மாள் கோவிலில் 709 வரிதாரர்கள் மூலம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டதாக கோவில் திருப்பணியின் போது எழுதப்பட்டது. இதில் பிரச்சினை ஏற்பட்டதால் அது அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊர் கூட்டம் நடத்தாமல் கோவில் கொடை விழா நடத்துவது தொடர்பாக தூத்துக்குடி தாசில்தார் 3 நபர்கள் கொண்ட குழுவை அமைத்தார். இதில் ஊர் மக்களுக்கு சம்மதம் இல்லை. எனவே தாசில்தார் நடத்திய கூட்டத்தில் அமைக்கப்பட்ட குழுவை ரத்து செய்ய வேண்டும். கிராமமக்கள் சார்பில் தேர்வு செய்யப்படும் நபர்களை கொண்டு கூட்டம் நடத்தி அதன் மூலம் தான் கோவில் கொடை விழா நடத்த முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மாவட்ட செயலாளர் தொண்டன் சுப்பிரமணி கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் மூடப்பட்டு தற்காலிகமாக அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகிறார்கள். மக்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே கலெக்டர் தற்காலிக பஸ் நிலையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
எட்டயபுரம் அயன்வடமலாபுரத்தை சேர்ந்த வரதராஜ் என்பவர் கொடுத்த மனுவில், ‘எட்டயபுரம் அயன்வடமலாபுரத்தில் பொதுப்பணித்துறை பாசன கண்மாய் உள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதி சுமார் 106 ஏக்கர். அந்த கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பணிக்கு கரம்பை மண் போட வேண்டியுள்ளது. எனவே பொதுப்பணித்துறை பாசன குளத்தில் இருந்து கரம்பை மண் அள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் கிராம மக்கள் நலக்குழு செயலாளர் உடையார் கொடுத்த மனுவில், ‘கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நபருக்கு 54 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதனை அரசு அறிவித்த படி 100 நாட்கள் வழங்க வேண்டும். அதே போல் கருங்குளம் மேலக்கால் பாசன குளங்களான மேலக்குளம், கிருஷ்ணன்குளம், பெரியகுளம், பெட்டை குளம் ஆகிய குளங்களை தூர்வார வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
திருச்செந்தூர் தோப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் திருச்செந்தூர் பேரூராட்சி சார்பில் குடிநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனால் திடீரென அந்த பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.