தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-15 22:00 GMT
நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள மேசியாபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவுவாயில் முன்பு வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டையுடன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், “நாங்கள் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தோம். கடந்த ஒரு மாதமாக எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படுகிறது. எங்களுக்கும் தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

திருவேங்கடம் தாலுகா மருதங்கிணறு அருகே உள்ள புதுக்குளம் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “2016-2017-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை நிலுவையில் உள்ளது. அதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “திசையன்விளை நகர பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளது. விவசாய பண்ணைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் 4 கடைகள் கட்டிக்கொள்ள செயல் அலுவலர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் அருகே உள்ள சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த முப்பிடாதி மனைவி பிரபா தலைமையில் அந்த ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “எனது கணவர் முப்பிடாதி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தற்சமயம் நாங்கள் எங்கள் ஊரில் புதிதாக வீடு கட்டி வருகிறோம். நெல்லை தாசில்தார் அனுமதி பெற்று காங்கையன் குளத்தில் மண் எடுத்து வருகிறோம். டிராக்டரில் மண் அள்ளி வரும்போது, எனது கணவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வழிமறித்து லஞ்சம் கேட்கிறார். தர மறுத்ததால் என் கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டுகிறார். எங்கள் ஊரைச் சேர்ந்த பலரை அவர் மிரட்டி வருகிறார். சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

தெற்கு செழியநல்லூரை சேர்ந்த விவசாய சங்க கிளை தலைவர் மணி சுடலை தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், “செழியநல்லூர் பாசனக்கால்வாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் தாலுகா குவளைக்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்த பிச்சமுத்து என்பவர் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், “எனது மகள் இலக்கியா கரிவலம்வந்தநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேர்ந்து படித்து வருகிறார். பள்ளி நிர்வாகம் இந்த ஆண்டு முதல் பாடப்புத்தகம் தரவில்லை. பள்ளிக்கூட பஸ்சில் செல்வதற்கும் அனுமதி வழங்கவில்லை. இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். சட்டத்தை மதிக்காத அந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரை சேர்ந்த சிலர் மீது களக்காடு போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை ஒன்றிய தி.மு.க. தொண்டர் அணி செயலாளர் முத்துக்குமார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டு பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

சேவாலய அறக்கட்டளை நிறுவனர் முரளிதரன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “மகாகவி பாரதியார் மனைவி செல்லம்மாள் கடையத்தில் பிறந்து வளர்ந்தார். அங்கு பாரதியும் தனது வாழ்நாளில் சில ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார். அவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் கடையத்தில் எங்கள் அறக்கட்டளை சார்பில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க அனுமதி தர வேண்டும். செல்லம்மாள், பாரதி வாழ்ந்த வீட்டின் அருகே அவர்களுக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும். கடையத்தில் இயங்கி வரும் சத்திரம் பாரதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரை சத்திரம் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஷேக் முகமது தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை மேலப்பாளையத்தில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையங்கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்