பேரணாம்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ரூ.4¼ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படையினர் நடவடிக்கை

பேரணாம்பட்டு பகுதியில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.4¼ லட்சத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-07-15 22:30 GMT
பேரணாம்பட்டு,

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி ஆந்திர மாநில எல்லையையொட்டி தமிழக தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் பேரணாம்பட்டுவை அடுத்த கமலாபுரம் கிராமத்தில் குடியாத்தம் சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசாரும், பறக்கும் படையினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனைச் செய்தனர். அதில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகில் உள்ள டி.கே.பள்ளியைச் சேர்ந்த தக்காளி வியாபாரியான சங்கர் (வயது 43) என்பவரிடம் ரூ.1¼ லட்சம் இருந்தது. ஆனால், அந்தப் பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லை எனத் தெரிய வந்தது.

வியாபாரி சங்கர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேனில் தக்காளியை ஏற்றிச்சென்று இறங்கி விட்டு, அங்கு ரூ.1¼ லட்சத்தை வசூலித்துக் கொண்டு, அதே வேனில் சென்னையில் இருந்து திரும்பி பேரணாம்பட்டு வழியாக குப்பத்தை நோக்கி வந்ததாக கூறினார். அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், உதவி தேர்தல் அலுவலரும் பேரணாம்பட்டு தாசில்தாருமான செண்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டுவை அடுத்த மதினாப்பள்ளி மலட்டாற்று மேம்பாலம் அருகில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் லோகபிரியன் தலைமையில் போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனைச் செய்தனர்.

காரில் வந்த வாணியம்பாடியை யாசியான்நகர் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான முகமதுஏஜாஸ் அஹமத் (49) என்பவரிடம் விசாரித்தபோது, அவர் பேரணாம்பட்டில் வஜ்ஜிர தொழிற்சாலை (இறைச்சி, எலும்பை பிரித்தெடுத்து, இறைச்சி மற்றும் தோல் ஆகியவற்றை காய்ச்சும் தொழிற்சாலை) நடத்தி வருவதாக கூறினார். தன்னுடைய தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.3 லட்சத்தை கொண்டு வந்ததாக கூறினார். ஆனால் பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து ரூ.3 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அலுவலரும் பேரணாம்பட்டு தாசில்தாருமான செண்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர்.

இதே போல நேற்று காலை அணைக்கட்டை அடுத்த மூலைகேட் பகுதியில் நிலைக்கண்காணிப்பு குழு அலுவலர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் லாரி டிரைவர் மோகன் ரூ.91 ஆயிரத்து 400 வைத்திருந்தார்.

இது தவிர அணைக்கட்டை அடுத்த இலவம்பாடி செல்லும் சாலையில் நேற்று மாலை தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழு அலுவலர் தேவராஜ் தலைமையில் பறக்கும் படையினர்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஆவணம் இல்லாமல் ரூ.51 ஆயிரத்து 650-ஜ வைத்திருந்தார். இருவரிடமும் சேர்த்து ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 50-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தார் பெருமாளிடம் ஒப்படைத்தனர்.

இவை தவிர குடியாத்தம் பகுதியில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. (இது பற்றிய விரிவான செய்தி 13-ம் பக்கம்). மொத்தத்தில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்