மேட்டூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்
மேட்டூர் அருகே குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர்,
மேட்டூர் அருகே ஆண்டிக்கரை செல்லும் சாலையில் கல்கிணறு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆண்டிக்கரை கிராம மக்கள், கல்கிணறு என்ற இடத்திற்கு நேற்று காலையில் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மேட்டூரில் இருந்து ஆண்டிக்கரைக்கு வந்த அரசு பஸ் உள்பட சில வாகனங்கள் அந்த பாதையில் செல்ல முடியாமல் நின்றன.
இது குறித்து தகவல் கிடைத்ததும், மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மற்றும் கோனூர் கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோர் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.