திருச்செங்கோடு குப்பை கிடங்கில் புதிய திட்டப்பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு

திருச்செங்கோடு குப்பை கிடங்கில் புதிய திட்டப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-07-15 22:15 GMT
நாமக்கல், 

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் அணிமூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் இங்கு கழிவுநீரை தேக்கி வைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த 200-க்கும் மேற்பட்ட அணிமூர் கிராமமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அணிமூர் குப்பை கிடங்கில் புதிய திட்டம் ஒன்றை நிறைவேற்ற திருச்செங்கோடு நகராட்சி முறையான முன்அனுமதி பெறாமல் பணி ஆணை வழங்கி உள்ளது. ஏற்கனவே திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் முறையாக சட்ட விதிகளை பின்பற்றாத காரணத்தால் அணிமூர் பகுதியில் சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து, கொடிய நோய்கள் உருவாகி உள்ளது. மேலும் தண்ணீர் முழுவதும் குடிக்க தகுதியற்றது ஆகிவிட்டது.

ஏற்கனவே குப்பை கிடங்கு சரியாக பராமரிக்கப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகள், மின்சாதன கழிவுகள், மருத்துவ கழிவுகளை மலைபோல் குவித்து வைத்து உள்ளனர். மேலும் புதிய திட்டத்தை வேலை முடித்ததும், பராமரிப்பு இன்றி கைவிட்டால், அதில் இருந்து வெளியேறும் கழிவினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய திட்டத்திற்கு கட்டுமான பணிக்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்