உறையூர், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

திருச்சி மருதாண்டக்குறிச்சியில் செயல்படும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் சிக்கியது.

Update: 2019-07-15 23:30 GMT
திருச்சி, 

திருச்சி மருதாண்டக்குறிச்சியில் உள்ள புதிய கட்டிடத்தில் உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் செயல்பட தொடங்கியது. ஆனி மாதம் முடியும் தருவாயில் நேற்று கடைசி சுபமுகூர்த்தநாள் ஆகும். ஆடி மாதம் பிறந்தால், பத்திரம் பதிவு செய்வதற்கு பெரும்பாலானவர்கள் விரும்பமாட்டார்கள்.

எனவே, நல்ல நாளில் பத்திரபதிவு செய்திட எண்ணி நேற்று வழக்கத்தைவிட அதிகமானவர்கள் உறையூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது சிலர் அங்கு முறைகேடாக பத்திர பதிவு செய்ய வந்திருப்பதாகவும், அதற்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாகவும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், சேவியர் ராணி, அருள்ஜோதி உள்ளிட்ட குழுவினர் 2 காரில் சென்று, உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்தனர்.

இதனையடுத்து உள்ளே இருந்தவர்களை வெளியே விடாமல் சார்பதிவாளர் அலுவலக கதவு சாத்தப்பட்டது. மேலும் அவர்கள் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் செல்போன்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வாங்கி வைத்து கொண்டனர். அத்துடன் பத்திர பதிவு செய்ய வந்த சிலரும் உள்ளே மாட்டிக்கொண்டனர்.

தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். நேற்று மட்டும் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் எத்தனை? என்றும், அதற்காக வசூலிக்கப்பட்ட அரசு கட்டண தொகை எவ்வளவு? என ஆய்வு செய்தனர். இரவு 9 மணிவரை இந்த சோதனை நீடித்தது.

அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 400 சிக்கியது. அந்த பணம் எப்படி வந்தது? என்றும், யாரிடம் பெற்ற தொகை? என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த சார்பதிவாளர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறினர். பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத பணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று உறையூரை சேர்ந்த 50 வயது பெண், தனது மகனுடன் பத்திரம் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது நில உரிமையாளரிடம் இருந்து வீட்டுமனை ஒன்றை கிரயம் செய்வதற்காக ரூ.50 ஆயிரம் எடுத்து வந்தார். சோதனைக்காக வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அப்பெண்ணிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் வாங்கி கொண்டனர். பணத்தை இழந்த சோகத்தில் இருந்த அந்த பெண், ‘நான் பணத்தை கிரயம் செய்வதற்காக எடுத்து வந்தேன். லஞ்சம் கொடுக்க எடுத்துவரவில்லை’ எனக்கூறி தலையில் அடித்து அழுதபடியே வெளியில் அமர்ந்திருந்தார். அப்போது சிலர், கிரயம் செய்ய எடுத்து வந்த பணமாக இருந்தால் உங்களிடமே அதிகாரிகள் திரும்ப தந்து விடுவார்கள் என அவருக்கு ஆறுதல் கூறினர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.47 ஆயிரம் சிக்கியது. மேலும் சோதனையிட்டு வரும் நிலையில், சார்பதிவாளர் வனஜாவிடம் லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்