திருமண இணையதளம் மூலம் பெண்ணிடம் ரூ.1.37 லட்சம் மோசடி நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

திருமண இணையதளம் மூலம் பெண்ணிடம் ரூ.1.37 லட்சம் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-15 22:15 GMT
உப்பள்ளி,

உப்பள்ளியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் திருமண இணையதளத்தில் தன்னுடைய பெயர், விவரத்தை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், அந்த இணையதளத்தில் கொடுத்த விவரங்களை வைத்து ஒருவர், இளம்பெண்ணுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர், உங்கள் தகுதிக்கு ஏற்ற மாதிரி அழகான, நன்கு சம்பாதிக்கும் மாப்பிள்ளை ஒருவர் உள்ளார் என்றும், மாப்பிள்ளையின் படங்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ரூ.1.37 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த இளம்பெண், மாப்பிள்ளையின் புகைப்படம் மற்றும் விவரங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். அதன்படி அந்த நபர், மாப்பிள்ளையின் படம் மற்றும் விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, இளம்பெண் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1.37 லட்சத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.

ரூ.1.37 லட்சம் மோசடி

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மாப்பிள்ளை குறித்து எந்த தகவலும் அந்த பெண்ணுக்கு கிடைக்கவில்லை. இதனால் இளம்பெண், அந்த நபரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருடைய செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அந்த இளம்பெண் உணர்ந்தார். பொய்யான புகைப்படம் மற்றும் விவரங்களை கொடுத்து ரூ.1.37 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த இளம்பெண் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டு இந்த மோசடி செய்தது தெரியவந்தது.

நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

இதுதொடர்பாக உப்பள்ளி சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, நைஜீரியாவை சேர்ந்த டவுக்ளாஸ் இபே (வயது 42) என்பவர் டெல்லி மாலவியா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து, திருமண இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளார். பின்னர் அந்த இணையதளம் மூலம் இளம்பெண் மற்றும், ஆண்களை ஏமாற்றி பணம் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் வைத்து டவுக்ளாஸ் இபேயை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்