கொல்லங்கோடு அருகே மர்ம விலங்கு தாக்கி 3 ஆடுகள் சாவு புலி ஊருக்குள் புகுந்ததாக பொதுமக்கள் அச்சம்
கொல்லங்கோடு அருகே மர்ம விலங்கு தாக்கி 3 ஆடுகள் இறந்து கிடந்தன. அங்கு பதிந்துள்ள கால்தடத்தை கண்ட பொதுமக்கள் புலி ஊருக்குள் புகுந்ததாக அச்சத்தில் உள்ளனர்.;
கொல்லங்கோடு,
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்தவர் டில்சன் (வயது 50), தொழிலாளி. இவர் தனது வீட்டில் 4 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு சென்று, இரவு வரும் ஆடுகளை வீட்டின் பின் பகுதியில் கட்டி வைப்பதும், அதில் 2 ஆடுகளில் தங்களின் வீட்டு தேவைக்காக பால் கறப்பதும் வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டில்சன் வீட்டின் பின் பகுதியில் ஆடுகளை கட்டி விட்டு தூங்க சென்றார். நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து பால் கறப்பதற்காக புறப்பட்டார். அப்போது 3 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.
அப்போது, இறந்து கிடந்த ஆடுகளில் கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் மர்ம விலங்கு தாக்கியிருந்தது தெரியவந்தது. மேலும், மற்றொரு ஆடு நகக்கீறலுடன் பலத்த காயமடைந்து இருந்தது. ஆடுகள் இறந்து கிடந்த பகுதியில் ஒரு விலங்கின் கால்தடம் பதிந்திருப்பதை பொதுமக்கள் கண்டு அச்சம் அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லங்கோட்டில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 ஆடுகள் மற்றும் ஒரு நாய் ஆகியவை இதேபோல் தாக்கப்பட்டு இறந்து கிடந்தன.
அப்போது புலி ஒன்று நடந்து செல்வதையும் அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். உடனே கேரள வனத்துறை அதிகாரிகள், புலியை பிடிக்க அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்துள்ளனர். ஆனால், கூண்டில் புலி சிக்கவில்லை. இதற்கிடையே கொல்லங்கோடு பகுதியில் அதேபோல் ஆடுகள் இறந்துள்ளதும், சகதியில் பதிவாகியுள்ள கால்தடமும் கேரளாவில் தப்பிய புலி தான் ஊருக் குள் புகுந்து இருக்குமோ? என்று அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தப்பி சென்ற மர்ம விலங்கை கூண்டுகள் அமைத்து விரைவில் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.