பத்ராவதி, தீர்த்தஹள்ளியில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் பலி
பத்ராவதி, தீர்த்தஹள்ளியில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 பேர் இறந்தனர்.
சிவமொக்கா,
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் சித்தாப்புரா எஸ்.டி.பி. லே-அவுட் பகுதியை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் பிரணவ்(வயது 8). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரணவ், தனது தந்தையுடன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தான்.
இந்த நிலையில் அந்த வழியாக தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக பிரணவ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரணவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். தன் கண்முன்னே மகன் இறந்ததை பார்த்து பிரணவின் தந்தை கதறி அழுதார். இந்த காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுபற்றி அறிந்த பத்ராவதி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரணவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதுபோல சிவமொக்கா டவுன் சூளைபைலு பகுதியை சேர்ந்தவர் உஸ்மான்(19). இந்த நிலையில் நேற்று முன்தினம் உஸ்மான் தனது நண்பரான ரியான் என்பவருடன் தீர்த்தஹள்ளி தாலுகா மண்டகத்தேவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர்கள் சூளைபைலு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட உஸ்மான் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரியான் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்துகள் குறித்து பத்ராவதி டவுன், மாளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.