நாமக்கல் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் பறிமுதல்
நாமக்கல் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல்லில் மோகனூர் சாலையில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதன் பின்புறத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகம் எண்.2 செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய் குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது சார்பதிவாளர் சுந்தரவடிவேல் மற்றும் பணியாளர்களிடமும், பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கணினியில் பதிவாகி உள்ள கணக்குகளையும் சரிபார்த்தனர்.
இறுதியாக கணக்கில் வராத சுமார் ரூ.41 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.