நரிக்குறவர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் ஷில்பா வழங்கினார்
நெல்லையில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்களிடம் கலெக்டர், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மானூர் மற்றும் பேட்டை பகுதியில் உள்ள நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 49 குழந்தைகளின் கல்வி உதவித்தொகை நரிக்குறவர் நல வாரியத்தின் மூலம் ரூ.35 ஆயிரம் வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் 2 பேருக்கு வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை தாலுகாவில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து பணியிடைக்காலத்தில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கப்பட்டது. அதற்கான பணி ஆணையை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாரணவரே, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நியூட்டன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் முருகன், குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர் சந்திரகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.