சுரண்டையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் பலி
சுரண்டையில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சுரண்டை,
நெல்லை மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் நாடார் இளைஞர்கள் சார்பில் 8-வது ஆண்டாக நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சிறிய அளவிலான காமராஜர் சிலை அமைத்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, ஏற்பாடுகளை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செய்து வந்தனர். நேற்று காலையில் விழா நடக்கும் பகுதியில் சுமார் 40 அடி உயரமுள்ள டிஜிட்டல் போர்டு கட்-அவுட் வைப்பதற்காக இளைஞர்கள் கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக காற்று வீசியதால் டிஜிட்டல் போர்டு கட்-அவுட், அருகில் உள்ள மின்சார கம்பத்தில் உரசியது. உடனே அவர்களை மின்சாரம் தாக்கியது.
இதில் கட்-அவுட்டை கொண்டு சென்ற அப்பகுதியை சேர்ந்த மணியின் மகன் சரவணன் (வயது 32), மாடக்கண்ணுவின் மகன் மணி என்ற மணிகண்டன் (27), திருமலைக்கனி மகன் அரவிந்த் (28) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கட்டிட தொழிலாளிகளான சரவணன், மணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அரவிந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான சரவணனுக்கு மாரிக்கனி (27) என்ற மனைவியும், ராகவன் (3), சிவன்யா (1) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.