மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை

மழைநீர் சேகரிப்பு குறித்து பெற்றோர், பொதுமக்களிடம் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

Update: 2019-07-15 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜல்சக்தி அபியான் திட்ட விழா, காமராஜர் பிறந்த நாள் விழா, உலக இளைஞர் திறன் நாள் விழா, இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி, நீர் மேலாண்மை குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மேலும் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், உதவி கலெக்டர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக மாறிவருகிறது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த இந்த நாளில் பள்ளி மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்து பெற்றோரிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் எதிர்கால தூண்கள். நல்லமுறையில் படித்து பல்வேறு உயர் பதவிகளை அடைய வேண்டும்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டப்பட உள்ளது. அதேபோல ரூ.5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறன் மாணவிகள் பயன்படுத்தும் வகையில் புதிய கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் இல்லங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் புதிதாக அமைக்கப்பட உள்ள மழைநீர் கட்டமைப்பு கட்டுமான பணிகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். மேலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கட்டமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறந்து வைத்தார்.

அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாசலம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்