பெரணமல்லூர் அரசு பள்ளியில் பல நாட்களாக பள்ளிக்கு வராத வேதியியல் ஆசிரியர் பணியிடைநீக்கம்
பெரணமல்லூர் அரசு மகளிர் பள்ளியில் பல நாட்களாக பணிக்கு வராத வேதியியல் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாடங்கள் நடத்தப் படாததால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு,
பெரணமல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக சோனு என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1-7-2019 முதல் நேற்று வரை 15 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அந்த பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவிகள் திடீரென பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை லீமா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் வேதியியல் பாடம் நடத்த ஆசிரியர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பின்னர் இது குறித்து உதவி தலைமை ஆசிரியர் லீமா நடந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறினார். அப்போது சோனு என்கிற ஆசிரியர் மீது பல்வேறு புகார் வந்ததாகவும், அதன் பேரில் ஆய்வு நடத்தி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதில் புதிய ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.
இதையடுத்து உதவி தலைமை ஆசிரியை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்ததை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கூறினார். அதைத் தொடர்ந்து மாணவிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.