குடியாத்தம் அருகே மாடு, வைக்கோல் வாங்க சென்றவர்களிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
குடியாத்தம் அருகே அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்,
வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைத்து சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் குடியாத்தம் அருகே பலமனேர் செல்லும் சாலையில் கே.வி.குப்பம் தொகுதி நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த உதவி வேளாண்மை பொறியாளர் கோதைமொழியன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது டிரைவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணம் எடுத்து செல்வது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் வேலூரை அடுத்த கணியம்பாடி கத்தாளம்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. அவர் கூறுகையில் ஆந்திர மாநிலத்துக்கு சென்று வைக்கோல் வாங்குவதற்காக அதனை எடுத்துச்செல்கிறேன் என்றார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றினர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் பகுதியில் கூடுதல் பறக்கும்படை அலுவலரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து லாரியில் வந்த திண்டுக்கல்லை அடுத்த ஆலந்தூரான்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது மாடு வாங்க கொண்டு செல்வது தெரிய வந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கைப்பற்றினர். 2 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் குடியாத்தம் தாசில்தார் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.