கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது, மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் பழங்கால சுவர் கண்டுபிடிப்பு - ராணி மங்கம்மாள் இருந்த சிறைச்சாலையா?
மதுரை பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் பழங்கால சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ராணி மங்கம்மாள் அடைக்கப்பட்ட சிறைச்சாலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆவணி மூல வீதியில் நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய அரண்மனை இருந்ததாகவும், அதில் தான் ராணிமங்கம்மாளை அவரது பேரன் சிறை வைத்ததாகவும் வரலாறு உண்டு. ராணிமங்கம்மாளை சிறை வைத்ததால் அந்த அரண்மனை சிறைச்சாலையாக உருமாறியது. காலப்போக்கில் அந்த கட்டிடங்கள் சேதம் அடைந்து, அங்கு மக்கள் கூடும் ஒரு அங்காடி போல் செயல்பட தொடங்கியது. பின்பு காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கி, அது சென்ட்ரல் மார்க்கெட் என அழைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. எனவே மார்க்கெட் செயல்பட்டு வந்த அந்த பகுதியில், ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தின் கீழ் நவீன அடுக்குமாடி வாகன காப்பகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அங்கு நடந்து வருகிறது. இந்த வாகன காப்பகத்திற்காக சுமார் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அங்கு கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், அந்த பகுதியின் ஒருபுறத்தில் செங்கலால் ஆன கட்டிட சுவர் ஒன்றும், மிகப்பெரும் தூண் ஒன்றும் தென்பட்டுள்ளது. இவை ராணி மங்கம்மாள் சிறை வைக்கப்பட்ட அறையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவை முழுவதும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அதனை முழுமையாக ஆய்வு செய்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.
இந்த பகுதியில் அடுக்குமாடி வாகன காப்பகம் கட்டக்கூடாது என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் அதனை மாநகராட்சி பொருட்படுத்தாமல் பணியினை தொடங்கியது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:-
பழைய சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இந்த பகுதியில் தான் ராணிமங்கம்மாள் சிறை வைக்கப்பட்டு இருந்தார். எனவே இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். கீழடி அகழ்வாராய்ச்சி பணியினை தலைமையேற்று செய்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கூட, இங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.
நாலாபுறமும் ஒரு மறைவினை ஏற்படுத்தி, ராட்சத எந்திரங்கள் கொண்டு அங்கு தோண்டும் பணி நடந்து முடிந்து உள்ளது. அங்கிருந்த பழமையான விஷயங்கள் சுவடுகள் இல்லாமல் மிக வேகமாக அழிக்கப்பட்டு விட்டன. எனவே அங்கு எஞ்சி இருக்கும் பழங்கால சின்னங்களை கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.