அசோக் சவான் ராஜினாமா: மராட்டிய காங்கிரஸ் தலைவராக பாலாசாகிப் தோரட் நியமனம்

அசோக் சவான் ராஜினாமாவையடுத்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகிப் தோரட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-07-14 23:00 GMT
மும்பை, 

அசோக் சவான் ராஜினாமாவையடுத்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகிப் தோரட் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலாசாகிப் தோரட் நியமனம்

நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், மாநில காங்கிரஸ் தலைவரை நியமிக்க தாமதம் ஏற்படலாம் என கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் வருவாய்த்துறை மந்திரி பாலாசாகிப் தோரட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநில தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதை கருத்தில் கொண்டு மாநில தலைவர் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாலாசாகிப் தோரட் மேற்கு மராட்டியத்தில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது உறவினர் சத்யஜீத் தாம்பே மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

5 செயல் தலைவர்கள்

இதுதவிர காங்கிரஸ் தலைமை மாநில செயல் தலைவர்களாக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நித்தின் ராவுத், அமராவதி பெண் எம்.எல்.ஏ. யஷோமதி தாக்கூர், லாத்தூர் எம்.எல்.ஏ. பாசவ்ராஜ் பாட்டீல், மேற்கு மராட்டிய பகுதியை சேர்ந்த விஸ்வஜீத் கதம், கொங்கன் பகுதி முஸ்லிம் தலைவர் முசாபர் உசேன் ஆகிய 5 பேரை நியமித்து உள்ளது.

காங்கிரசில் செயல் தலைவர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுதவிர தேர்தல் வியூக கமிட்டி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு கமிட்டிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமிட்டி தலைவர்கள்

தேர்தல் வியூக கமிட்டிக்கு மாநில தலைவர் பாலாசாகிப் தோரட் தலைவராக இருப்பார். இதற்கு இணை தலைவராக அசோக் சவானும், முன்னாள் மந்திரி ஹர்ஷவர்த பாட்டீலும் செயல்படுவார்கள். இதன் உறுப்பினர்களாக மிலிந்த் தியோரா, பிரிதிவிராஜ் சவான், சுஷில்குமார் ஷிண்டே, மாணிக்கராவ் தாக்கரே போன்ற மூத்த தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கமிட்டியின் தலைவராக பிரிதிவிராஜ் சவானும், ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக சுஷில்குமார் ஷிண்டேவும், பிரசார கமிட்டி தலைவராக நானா பட்டோலேவும், விளம்பர கமிட்டி தலைவராக ரத்னகர் மகாஜனும், ஊடக கமிட்டி தலைவராக ராஜேந்திர தர்தாவும், மாநில தேர்தல் கமிட்டி தலைவராக பாலாசாகிப் தோரட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்