விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில், காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வித்திருவிழா - 2 அமைச்சர்கள் பங்கேற்பு
விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வித்திருவிழா நடந்தது. இதில் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மதுரை,
விருதுநகரில் நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நேற்று தொடங்கியது. கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் கல்வி கண் திறந்தவர் என்று போற்றப்படுபவர். தமிழகத்தில் 9 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்தியவர். அவர் விரல் அசைத்தால், இந்த நாடே இயங்கக்கூடிய சூழல் இருந்தது. தமிழகத்தில் கிராமப் பகுதிகளிலும் ஏழை, எளிய மாணவர்களுக்காக பள்ளிகளை திறந்தவர்.
நாடார் சமுதாய மக்களின் கல்விப்பணி, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகிறது. கல்விப்பணி தொடர்பாக அவர்கள் வைக்கும் கோரிக்கையை 24 மணி நேரத்தில் இந்த அரசு நிறைவேற்றி தருகிறது. அவர்கள் ஏற்றிய கல்வி என்ற அணையாத தீபத்திற்கு இந்த அரசு அரணாக விளங்குகிறது.
தமிழகத்தில் மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. 9, 10, 11, 12-ம் வகுப்புகள் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் கணினி மயமாக்கப்படும்.
தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மினி மடிக்கணினி (டேப்) வழங்குவதற்கு மலேசிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்றவுடன் மாநிலம் முழுவதும் 25 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மினி மடிக்கணினி வழங்கப்படும். கல்விப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்ய தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் கரிக்கோல்ராஜ் வரவேற்று பேசியதுடன், அமைச்சர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கினார். இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா(ஸ்ரீவில்லிபுத்தூர்), எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்(சாத்தூர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவினை மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் கதிரவன் தொகுத்து வழங்கினார். முன்னதாக, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் காமராஜர் நூற்றாண்டு மணி மண்டபத்திற்கு சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், “விருதுநகர் மாவட்டம் முழுவதும் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நாடார் சமுதாயத்தினர் கல்வி நிலையங்களை திறந்து சிறப்பான கல்விப்பணி ஆற்றி வருகிறார்கள். கல்வி பணியாற்றிடும் அனைவருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உறுதுணையாக இருக்கும்” என்றார்.
டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசும்போது, “நாடார் சமுதாயத்தின் கல்வி பணியை பாராட்டியதுடன், மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார்” என்று கூறினார்.