ராமலிங்கரெட்டியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ராஜினாமாவை வாபஸ் பெறும்படி வலியுறுத்தினர்

ராமலிங்கரெட்டியுடன் நேற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது ராஜினாமாவை வாபஸ் பெறும்படி அவரிடம் வலியுறுத்தினார்கள்.;

Update:2019-07-15 03:30 IST
பெங்களூரு, 

ராமலிங்கரெட்டியுடன் நேற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது ராஜினாமாவை வாபஸ் பெறும்படி அவரிடம் வலியுறுத்தினார்கள்.

ராமலிங்கரெட்டியுடன் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் சேர்ந்து முனிரத்னா, சோமசேகர், பைரதி பசவராஜ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். இதற்கிடையில், ராமலிங்கரெட்டியை சமாதானப்படுத்தினால் கூட்டணி ஆட்சி கவிழ்வதை தடுத்து விடலாம் என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் நினைக்கின்றனர். இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பா.ஜனதாவினரும் ராமலிங்கரெட்டியை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் ராஜினாமா விவகாரம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் ரமேஷ்குமார் முன்பு விசாரணைக்கு ஆஜரான பின்பு தான் அடுத்தகட்ட முடிவு எடுப்பேன் என்று ராமலிங்கரெட்டி திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த நிலையில், நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள ராமலிங்கரெட்டியின் வீட்டுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் சென்றனர். அங்கு ராமலிங்கரெட்டி, அவரது மகள் சவுமியா ரெட்டியை அவர்கள் சந்தித்து பேசினார்கள்.

ராஜினாமாவை வாபஸ் பெற கோரிக்கை

இந்த சந்திப்பின் போது ராஜினாமாவை வாபஸ் பெறும்படி ராமலிங்கரெட்டியிடம் எச்.கே.பட்டீல் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் அவர் புறக்கணிக்கப்பட்டது தவறு தான் என்றும், கட்சியில் உரிய மரியாதை மற்றும் பதவி கொடுப்பதாகவும், எக்காரணத்தை கொண்டும் கட்சியை விட்டு விலக கூடாது என்றும் ராமலிங்கரெட்டியிடம் எச்.கே.பட்டீலும், ஈஸ்வர் கன்ட்ரேவும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் தனது முடிவை நாளை (அதாவது இன்று) எடுப்பதாகவும், அதுவரை அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என்றும் ராமலிங்கரெட்டி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து எச்.கே.பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ராமலிங்கரெட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்ததில் ராமலிங்கரெட்டியின் பங்கு மிகப் பெரியதாகும். அவரை போன்ற தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பாக தேவை. அதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். வாபஸ் பெறும்படி அவரிடம் வலியுறுத்தினோம்.

அவர் ராஜினாமாவை திரும்ப பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும்,” என்றார்.

மேலும் செய்திகள்