கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவியை கொன்ற தொழிலாளி பிணத்துடன் மகள்கள், மகனை வீட்டில் பூட்டி சென்றார்

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவியை கொன்ற தொழிலாளி, பிணத்துடன் சேர்த்து 2 மகள்கள், ஒரு மகனை வீட்டில் பூட்டி வைத்து சென்றுவிட்டார்.

Update: 2019-07-14 22:00 GMT
பெங்களூரு, 

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவியை கொன்ற தொழிலாளி, பிணத்துடன் சேர்த்து 2 மகள்கள், ஒரு மகனை வீட்டில் பூட்டி வைத்து சென்றுவிட்டார்.

குடிபோதை தகராறு

தமிழகத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி பெயர் உமாராணி (வயது 30). இவர்கள் 2 பேரும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 11 மற்றும் 8 வயது நிரம்பிய மகள்களும், 6 வயது நிரம்பிய மகனும் உள்ளனர். சின்னசாமி தனது குடும்பத்துடன் பெங்களூரு பீலேஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

சின்னசாமி பழைய பொருட்களை சேகரித்து வியாபாரம் செய்து வருகிறார். உமாராணி மருத்துவமனை ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சின்னசாமிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உமாராணியிடம் தகராறு செய்து வந்தார்.

கொலை

சம்பவத்தன்று இரவு சின்னசாமி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். உமாராணி அவரை கண்டித்ததோடு, குடிப்பழக்கத்தை கைவிடும்படி அவரிடம் கூறினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, உமாராணி தனது மகள்கள், மகனுடன் வீட்டில் படுத்து தூங்கினார். சின்னசாமியும் வீட்டில் இருந்தார்.

நள்ளிரவில் திடீரென்று சின்னசாமி, உமாராணியின் தலையில் கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்டு கொலை செய்தார். சிலிண்டர் விழுந்த சத்தம் கேட்டு அவருடைய 2 மகள்கள், மகன் ஆகியோர் கண்விழித்தனர். உமாராணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அழ தொடங்கினர்.

வலைவீச்சு

இதனால் பயந்துபோன சின்னசாமி உமாராணியின் உடல் அருகே அவருடைய 2 மகள்கள், ஒரு மகனை வைத்து வீட்டை பூட்டிவிட்டு ஓடிவிட்டார். இதற்கிடையே, அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது உமாராணி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக மைகோ லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னசாமியை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தனிப்படை போலீசார் சின்னசாமியை தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்