ராஜினாமாவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏ. சோமசேகர் பரபரப்பு பேட்டி

நாங்கள் 12 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும், ராஜினாமாவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மும்பையில் நேற்று அதிருப்தி எம்.எல்.ஏ. சோமசேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-14 23:30 GMT
பெங்களூரு, 

நாங்கள் 12 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும், ராஜினாமாவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மும்பையில் நேற்று அதிருப்தி எம்.எல்.ஏ. சோமசேகர் தெரிவித்துள்ளார்.

எம்.டி.பி.நாகராஜ் சென்றார்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, பிரதாப்கவுடா பட்டீல், பி.சி.பட்டீல், சிவராம் ஹெப்பார் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் மும்பை ஓட்டலில் தங்கி உள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துவிட்டு நேற்று காலையில் எம்.டி.பி.நாகராஜும் மும்பைக்கு சென்றார்.

அவர், மற்ற எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த சென்றிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மும்பை ஓட்டலில் நேற்று 12 எம்.எல்.ஏ.க்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சோமசேகர் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ஒற்றுமையாக இருக்கிறோம்

நாங்கள் 12 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருக்கிறோம். எங்களை சமாதானப்படுத்து வதற்காக தான் எம்.டி.பி.நாகராஜ் மும்பை வந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அது உண்மை அல்ல. எம்.டி.பி.நாகராஜை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தி ராஜினாமாவை திரும்ப பெறும்படி கூறி வலியுறுத்தியுள்ளனர். தலைவர்கள் அவருக்கு அழுத்தமும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் ராஜினாமா முடிவில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று தலைவர்களிடம் கூறியுள்ளார்.

அப்படி இருந்தும் அவரை கட்டாயப்படுத்தியதால், வேறு வழியின்றி தலைவர்கள் முன்னிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் எங்களுடன் வந்து சேர்ந்துள்ளார். நாங்கள் 12 பேரும் தனித்தனி குழுக்களாக இருப்பதாகவும், எங்களுக்குள் பிரிவு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுபோன்று வெளியாகும் தகவல் தவறானது. நாங்கள் 12 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த குழுவோ, பிரிவோ இல்லை.

ராஜினாமாவை திரும்ப பெறும்...

எங்களது தொகுதிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளோம். ராஜினாமாவை திரும்ப பெறும் நிலையில் இருந்து நீண்ட தூரம் வந்து விட்டோம். ராஜினாமா கொடுக்க சென்ற சுதாகர் எம்.எல்.ஏ.வை காங்கிரஸ் தலைவர்கள் தாக்கி, அவமானப்படுத்தி உள்ளனர். அந்த சம்பவத்தால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சுதாகர் எம்.எல்.ஏ. எங்களுடன் விரைவில் சேருவார். அவர் டெல்லி இருக்க வாய்ப்புள்ளது.

நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளோம். ராஜினாமாவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் எந்த தலைவரையும் சந்திக்க விரும்பவில்லை. நாங்கள் பா.ஜனதாவினர் உள்ளிட்ட யாருடைய தொடர்பிலும் இல்லை. யாரையும் தொடர்பு கொண்டு பேசவும் விரும்பவில்லை. ராஜினாமாவை மட்டும் ஒரு போதும் திரும்ப பெற மாட்டோம். வேறு எது பற்றியும் பேச விரும்பவில்லை.

இவ்வாறு சோமசேகர் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்