திருவெற்றியூரில், மின்கம்பத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்
திருவெற்றியூரில் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்து அப்பகுதி மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி,
திருவெற்றியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு தொண்டி துணை மின் நிலையத்தில் இருந்து ஆதியூர் வழியாக மின்பாதை செல்கிறது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் பாதை என்பதால் பல வருடங்களுக்கு முன்பே மின்கம்பிகள் அதன் திறனை இழந்துவிட்டன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. லேசான காற்றடித்தால் கூட கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டு விடும். இவ்வாறு பல நாட்கள் இரவு நேரங்களில் பல கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கும் அவலநிலைஇருந்து வருகிறது. இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கை மனுக்கள் அளித்தும் வந்தனர்.
அதனை தொடர்ந்து இப்பகுதி உதய் மின் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு திருவெற்றி யூருக்கு தொண்டி துணை மின் நிலையத்தில் இருந்து புதுப்பட்டினம் வீரசங்கிலிமடம் வழியாக புதிய மின் பாதை அமைக்கப்பட்டு அதற்கான மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் மின்தடை பிரச்சினை தொடர்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை அரசின் கவனத்தை ஈர்க்கவும், இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரியும் வலியுறுத்தி திருவெற்றியூரை சேர்ந்த கிராம மக்கள் புதிய மின்பாதைக்கு நடப்பட்டுள்ள மின்கம்பங்களில் மாலை அணிவித்து பூஜை செய்து வழிபடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- இப்பகுதியில் புதிய மின் பாதை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து பலமுறை மாவட்ட நிர்வாகத்தையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புதிய மின் பாதைக்காக நடப்பட்ட மின்கம்பங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உடனடியாக இந்த புதிய மின்பாதை வழியாக மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இப்பகுதி மக்களை திரட்டி மாவட்ட தலைநகரில் உள்ள மின் துறை உயர் அதிகாரி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.