அரசு விடுதியில் குடிநீர் குடித்த 10 மாணவிகளுக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு ஆஸ்பத்திரியில் அனுமதி

போச்சம்பள்ளி அரசு விடுதியில் குடிநீர் குடித்த 10 மாணவிகளுக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-07-14 23:00 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் அரசுப்பள்ளி மாணவிகள் போச்சம்பள்ளியில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த விடுதியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இருந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவிகள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை என்றும் மாணவிகளின் பெற்றோர் பலரும் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த விடுதியில் மாணவிகள் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்