பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் கோரிக்கை விடுத்து உள்ளார்.;
தூத்துக்குடி,
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
பராமரிப்பு
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் வியாபாரிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் இருந்து கொல்லம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்துக்கும், சென்னைக்கும் கூடுதல் ரெயில் இயக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதனை நிறைவேற்ற வேண்டும். முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இணைத்து தூத்துக்குடியில் வைத்து தினமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிட்லைன் இல்லாததால் கூடுதல் ரெயில் இயக்க வாய்ப்பு இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் தூத்துக்குடி மக்களை புறக்கணித்து வருகிறது. ஆகையால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இணைப்பில் இருந்து பிரிக்க வேண்டும்.
பாலருவி எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடி பிட்லைனில் வாரத்தில் 3 நாட்கள் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பராமரிக்க வேண்டும். மீதமுள்ள 4 நாட்களில் நெல்லை- பாலக் காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தூத்துக்குடி பிட்லைனில் வைத்து வாரத்தில் 2 நாட்கள் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். 2 நாட்கள் தூத்துக்குடி- சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்கி தூத்துக் குடி பிட்லைனில் வைத்து பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாம். மேலும் தூத்துக்குடிக்கு வரும் பராமரிப்பு பணிகள் இல்லாத ரெயில்களை தட்டப்பாறை அல்லது மீளவிட்டானுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை இடையே கூடுதல் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.