காஷ்மீர் மாநிலத்தில், கூடலூர் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடலூரை சேர்ந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-07-14 22:45 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் காசிம்வயலை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றிய நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மகன் ராம்குமார் (வயது 31). இவர் துணை ராணுவ வீரராக காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மேல்கூடலூர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிதின்குமார் (வயது 4) என்ற மகன் உள்ளார்.

ராம்குமாருக்கும், கவிதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம்குமார் விடுமுறையில் கூடலூர் காசிம்வயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் கடந்த மாதம் 1-ந் தேதி விடுமுறை முடிந்து காஷ்மீருக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ராம்குமார் ஈடுபட்டு கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் கூறியதாவது:-

கூடலூர் காசிம்வயலை சேர்ந்த ராணுவ வீரர் ராம்குமார் காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்து போன ராம்குமாரின் உடல் கூடலூருக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்